இராணுவ வெற்றியை கொண்டாடுமாறு கோரி கிழக்கு பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்கள் அட்டகாசம்

(2ம் இணைப்பு)
    இராணுவ வெற்றியை கொண்டாடுமாறு கோரி கிழக்கு பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்கள் அட்டகாசம்
    [ வெள்ளிக்கிழமை, 18 யூன் 2010, 04:07.16 AM GMT +05:30 ]

    மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகத்தில் கல்வி பயில்கின்ற சிங்கள மாணவர்கள், இராணுவ வெற்றிவிழாவை கொண்டாடுவதற்கு தமக்கு பணம் தரவில்லை என கூறி கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தெரியவருவதாவது:


    கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் சிங்கள மாணவர்கள் சிலர் நேற்றிரவு தமிழ் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்து இராணுவ வெற்றிவிழாவை கொண்டாடுவதற்கு தமக்கு பணம் தரவேண்டும் என்றும் பிரபாகரன் கொல்லப்பட்டதை கிழக்கு பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.


    மது போதையில் காணப்பட்ட அந்த சிங்கள மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தமிழ் மாணவர்கள் கோரியபோது இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


    இதனையடுத்து பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் தமிழ் மாணவர்கள் மீது தாக்கிவிட்டு சென்றதாகவும் இதைஅறிந்த சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் அங்கு சென்ற போது மீண்டும் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


    இதனையடுத்து மதுபோதையில் இருந்த சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் பல்கலைக்கழக காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.


    நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பல்கலைக்கழக துணை வேந்தர், மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் அங்கு சென்று சமரச முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் தமக்கு பாதுகாப்பு இல்லை என கூறி சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கிழக்கு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுமார் 35 சிங்கள மாணவர்கள் கல்வி கற்பதாகவும் தற்போது அங்கு 17 மாணவர்கள் தங்கியிருப்பதாகவும் கிழக்கு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





    Speak Your Mind

    Tell us what you're thinking...
    and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!