வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக வழக்கு: சீமான் கைது! 23ம் திகதி வரை வேலூர் சிறையில் அடைப்பு

(2ம் இணைப்பு)
வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக வழக்கு: சீமான் கைது! 23ம் திகதி வரை வேலூர் சிறையில் அடைப்பு
[ திங்கட்கிழமை, 12 யூலை 2010, 07:48.30 AM GMT +05:30 ]
தமிழக மீனவர்கள் இனிமேலும்  இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சிங்களவர்களை விடமாட்டோம் என்று வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.

ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சிங்களவர்களை விடமாட்டோம் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் சீமான் தலைமறைவானார்.


இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் பொலிஸார் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இல்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.


இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார்.


ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக பொலிஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.


அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார் என்று தெரிவித்தனர்.


அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு வந்தார். இதையடுத்து பகல் 12 மணியளவில் தயாராக குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் சீமானை சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இது தமிழ்நாடு அல்லது இலங்கையா? சீமான் ஆவேசம்!


கைதான சீமான் தனது வழக்கறிஞர் சதா சந்திரசேகரன் மூலமாக சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை ஜூலை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சீமான், அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக சீமானை வேலூர் சிறைக்கு மாற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!