ராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பாராம்: ப.சிதம்பரம்

ராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பாராம்: ப.சிதம்பரம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 12:40.34 AM GMT +05:30 ]
நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜர் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசிய போது இலங்கைப் பிரச்சினை பற்றி கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-


ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்றையோ இருக்கக் கூடாது. நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது. நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். இரவு 12 மணிக்கு எனது காரை நானே ஓட்டிச்சென்று அவர் இருந்த இடத்தில் அவருடன் பல மணி நேரம் பேசியிருக்கிறேன்.


அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிரு ந்தால் இன்று இலங்கையில் இரு மாகாண ங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். ஆனால், நிலைமை வேறாகிவிட்டது. இலங்கையில் எத்தனை பேருக்கு பேரிழப்பு. எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.


இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக இந்தியா 3600 கோடி நிதி உதவி அளித்துள்ளது. அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காங்கேசன் துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் சீர்படுத்திக் கொடுக்க இந்தியா முன் வந்திருக்கிறது. இன்னும் 2 வருட காலத்தில் அங்குள்ள 2 லட்சம் தமிழர்களுக்கும் வீடு கட்டி கொடுக்கப்படும் என்றார்.


இதேவேளை இந்தியாவினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் 50 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படவுள்ள நிதியை வடக்கு கிழக்கில் படையினர் மற்றும் சிங்கள மக்களுக்கென ஆக்கிரமிக்கப்படவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய செயற்படுமாறும் அவர்கள் வடக்கு கிழக்கு அரச அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த வங்கிக் கணக்குக்களுக்கு நேரடியாகவே பணத்தினை அனுப்ப முற்பட்ட வேளை அவ்வாறு அனுப்ப முடியாது என்றும் பணம் தமது அரசின் ஊடாகவே கையளிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வாரம் வடக்கு கிழக்கு உயர் அதிகாரிகள், ஆளுநர்கள், மற்றும் நிர்வாகிகளுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் முடிவுகளை வெளியிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகள், இந்தியாவால் வடக்கு மக்களுக்கு வழங்கவென அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட குறித்த பணத்தினை தமது தேவைகளுக்கு மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இந்த விடயம் குறித்து எந்த விடயத்தினையும் வெளிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!