ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள்
|
||
| ரிஸானாவின் மரண தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சவூதி மன்னரிடம் வேண்டுகோள் | ||
| [ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:11.57 AM GMT +05:30 ] | ||
![]() சவூதி அரேபியாவில் 2005 ம் ஆண்டு, 4 மாத குழந்தை ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மூதூரை சேர்ந்த ரிஸானா நபீக்கின் தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. |
||
இந்த கொலை சம்பவம் தற்செயலாகவே இடம்பெற்றது என்ற அடிப்படையில் ரிஸானா, தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சவூதி நீதிமன்றம் ரிஸானாவுக்கான மரண தண்டனையை உறுதிசெய்துள்ளது. இந்தநிலையில், இந்த விடயத்தில் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட இலங்கை அரசாங்கம், தீர்மானித்துள்ளது. இதன்படி, ரிஸானா நபீக்கிற்கான தண்டனையில் தளர்வை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,சவூதி மன்னரிடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் கடிதம் இன்று சவூதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, ரிஸானாவின் தாயாரான செய்யது அபூபக்கர் ரஸீனா இது தொடர்பாக கூறுகையில், அப்பாவியான தனது மகள் குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே சவூதி செல்ல வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. பச்சிளம் குழந்தையொன்றின் உயிரைப் பறிக்குமளவுக்கு அவள் இரக்கமில்லாதவளில்லை. இன்று வரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் படாதபாடுபட்டு விட்டாள். அவள் அனுபவித்த கொடுமைகள் போதும். மேலும் தண்டனை வழங்காமல் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் எனது பிள்ளைக்கு மறுவாழ்வளிக்குமாறு அனைத்து தரப்பினடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
|
||
